Wednesday, March 20, 2019

Damien Chazelle: சாகசமும் சாதாரண வாழ்க்கையும்

 


சில இயக்குனர்களின் படங்களில் இது எந்த இயக்குனரின் படம் என்று காட்டுவதை போல அந்த இயக்குனருக்கான சில முத்திரைகள் இருக்கும். Martin Scorsese  படம் என்றால் வன்முறை மற்றும் gangster வாழ்க்கையின் விவரங்களை  எதிர்பார்க்கலாம். அதே போல Nolanஇன் படத்தில் Nonlinear திரைக்கதையும், Tarantino  படங்களில் ரத்தவெள்ளமும் கெட்ட வார்த்தைகளும் வழிந்து ஓடும். இது போலவே வெறும் மூன்று படங்களை இயக்கிய சிறிய வேளையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் தான் Damien Chazelle.

     Damien Chazelle இயக்கிய மூன்று படங்கள்: Whiplash, La La Land மற்றும் First Man. Whiplash ஒரு இசை கலைஞனின் கதை. ஒரு சிறந்த drummer ஆக வேண்டும் என்று போராடும் Andrew Miles ஒரு பக்கமும், அரக்க குணம் கொண்ட அவன் ஆசான் Fletcher இன்னொரு பக்கமும், இவர்கள் இடையே வரும் நெரிசல்களை தான் படம் காட்டுகிறது. 
      La La Land ஒரு காதல் கதை. Musical ஆக வடிவமைக்கப்பட்ட இந்த படம் Mia என்ற ஒரு போராடும் நடிகையும் Sebastian என்கிற Jazz Piano கலைஞனுக்கும் நடுவே மலரும் காதலை காட்டுகிறது. தங்களின் துறைகளில் வெற்றிப்பெற அவர்கள் கலை மற்றும் காதலில் செய்யும் தியாகம் தான் இந்த படத்தின் கரு.
       First Man உலகத்தையே திரும்பிப்பார்க வைத்த ஒரு வரலாற்று சம்பவத்தை சார்ந்த படம். முதல் முதலாக சந்திர கிரகத்தில் கால் வைத்த அமெரிக்க விண்வெளி வீரன் Neil Armstrong மற்றும் அவர் குழுவினரின் கதை.

    இந்த மூன்று கதையிலும் ஒற்றுமை என்னவென்றால் இது ஒரு சாதனையை படைக்க, சாமான்ய வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் செய்ய வேண்டிய தியாகங்களையும் குறித்து பேசுகிறது. பொதுவாக ஒரு சாதனையை நோக்கி செல்வது போல் ஒரு படத்தில் காட்டினால், கடைசி தருணத்தின் வரை கதாநாயகன் பல சிக்கல்களை சந்திப்பான் ஆனால் வெற்றி பெரும் நேரத்தில் எல்லாம் அவன் கைக்கூடி வரும். அவனை விட்டுச்சென்ற உறவுகள், அவன் காதலி, அவனை கேவலப்படுத்திய சமூகம் எல்லோரும் அவனை ஆதரித்து ஒரு சந்தோஷமான முடிவு கிடைக்கும். ஆனால் Damien Chazelle படங்களிலோ இதற்கு நேர் எதிராக நடக்கும் .
     எந்த ஒரு சாதனை செய்வதற்கும் தியாகங்கள் அவசியம். அது மட்டும் இல்லாமல் சாதனையை அடைந்தாலும் சந்தோஷம் கிடைக்கும் என்று ஒரு உத்தரவாதம் இருக்காது. உதாரணத்திற்கு Whiplash படத்தில் ஒரு drummer ஆக Andrew தன்  குடும்பத்தினருடன் சண்டை போடுவான், தன் காதலியை விட்டு விலகுவான், எந்நேரமும் தன் drums பயிற்சியில் மற்றும் கவனம் செலுத்துவான். அவன் மீது பாசம் காட்டுபவர்களிடத்தில்  இருந்து விலகி, தன்னை கேவலமாக நடத்தும் Fletcherஇன் பாராட்டுக்காகவே அவன் அலைவான். வெறித்தனமாக பயிற்சி செய்து விபத்தில் சிக்கி தன் வாய்ப்புகளை இழந்து ஒரு இருட்டான நிலைமைக்கு அவன் தள்ளப்படுவான். கடைசி காட்சியில் அவன் ஒரு மிரட்டலான இசை நிகழ்ச்சியை அவன் குடுத்தாலும், அவன் கண் என்னவோ Fletcher இடம் தான் போகிறது. அவன் வெற்றி தற்காலிகமானது. அதன் பின்பு அவன் வாழ்க்கை ஒரு கேள்விக்குறி தான்.
      இது போலவே La La Land இல் Sebastian வெற்றிக்காக அவன் கலை கொள்கையை விட்டுத்தருவான். இது வாழ்க்கையை நிலையாக்காமல் அவன் காதலியையும் தன்னிடத்திலிருந்து பிரித்து விடுகிறது. கடைசியில் வரும் இசைக்காட்சி ஒரு கனவு போல் இருக்கும். எல்லாம் கச்சிதமாக அமைந்திருந்தால் Mia மற்றும் Sebastian கையில் தொழில்ரீதியாகவும் காதல்ரீதியாகவும் வெற்றி வந்து சேர்ந்திருக்கும் என்று காட்டும். ஆனால் அது கனவு மட்டுமே. நிஜ வாழ்க்கை என்னவோ அப்படி கச்சிதமாக அமைவதில்லை.
     First Man வர்ணிக்கும் கதையில் Neil Armstrong ஒரு சாதாரண மனிதன். இதுவரை வந்த வரலாற்றில் அவரை ஒரு "Superhero" போல மட்டும் பார்த்த உலகத்திற்கு அவரும் ஒரு கணவன், ஒரு அப்பா, ஒரு நண்பன், தப்புகள் செய்யக்கூடிய மனிதன் என்று இந்த படம் காட்டும். ஒரு உருக்கமான காட்சியில் Neil விண்வெளிக்கு கிளம்பும் முன் தன் பிள்ளைகளிடம் சொல்வார், "நான் திரும்பி வராமல் கூட போகலாம். முயற்சி செய்கிறேன் திரும்பி வருவதற்கு என்று." அவர் குடும்பத்தின் மனநிலையை அந்த காட்சியில் வரும் மௌனம் பிரதிபலிக்கும்.

   முக்கியமான காட்சிகளில் Damien Chazelle வசனங்களை வைப்பதில்லை. வெறும் இசை மற்றும் காட்சிகளை வைத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முயற்சி செய்யும் மனிதனின் மனநிலையை திரையில் காட்டுவார். வாழ்க்கையில் எதுவும் இலவசம் இல்லை, வெற்றிக்கு தியாகம் அவசியம் என்று காட்டுவதே Damien Chazelleஇன் படங்கள். படத்தை பார்த்தப்பின்பு சந்தோஷமும் இருக்காது சோகமும் இருக்காது. வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு தெளிவு மட்டுமே இருக்கும். படங்களில் முடிவில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் கண்கள் மட்டும் சந்தித்துக்கொள்ளும். அப்பொழுது வரை ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு வினாடிக்கு நிற்கும். அந்த அனுபவத்தை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது, அதை உணரத்தான் முடியும்.

- ஆதித்யா

 

1 comment:

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...